காதல் கழிமுகம் 🥰😍💜❤️

ஒரு முறைதான், ஒரே ஒரு முறைதான், உங்கள் உலகத்தை மாற்றக் கூடிய ஒருவரைச் சந்திப்பீர்கள். வேறு ஒருவரோடும் பகிர்ந்து கொள்ளாத -பகிர்ந்து கொள்ள முடியாத விசயங்களை அவரிடம் சொல்வீர்கள். நீங்கள் சொல்வது போலவே அவரால் உள்வாங்கவும் முடியும். உங்கள் பக்கமிருந்து அவரால் உங்களைப் புரிந்துகொள்ளவும் முடியும்.



 உங்களை மதிப்போடு முன்னிறுத்தி நீங்கள் பேசுவதை முழுதாகக் கேட்க விரும்புவார். உங்கள் எதிர்காலம், நிறைவேறாத கனவுகள், செய்ய விரும்பும் ஆசைகள், எட்ட முடியாத சிகரங்கள், வாழ்க்கை உங்கள் மீது வீசிய கொடுங்கற்கள், கடந்தகாலம் கொடுத்த காயங்கள் என அனைத்தையும் அவரிடம் கொட்டித் தீர்ப்பீர்கள். உங்கள் வாழ்வில் எது நடந்தாலும், அவரிடம் சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் காயங்கள் மீது பூசிவிடும் களிம்பை அவரின் காதலில் பார்ப்பீர்கள்.



சின்னஞ்சிறு நிகழ்விலெல்லாம் மகிழ்ச்சி கொள்ளும் உங்கள் பரவசத்தில் அவரும் பங்கு கொள்வார். உங்களிடம் அழவோ, உங்கள் பைத்தியத்தனத்தைப் பார்த்து சிரிக்கவோ தயங்க மாட்டார். உங்கள் உணர்ச்சிகளை அவர்களால் காயப்படுத்த முடியாது. உங்களை மதிப்பிட மாட்டார். உங்களை வளர்த்தெடுக்க அனைத்தையும் செய்வார். உங்களுக்கே தெரியாத உங்களைக் காண்பித்து, உங்களை அழகாக்குவார். அவ்வாறு செய்யும் எவற்றிலும் தன் பெயரை எழுதாமல் உங்களையே அவற்றிற்கு உரிமையாக்கி உவகை கொள்வார். அவரின் அருகாமையில்  எவ்வித மன அழுத்தமோ, பொறாமையோ உங்களுக்கு  இருக்காது. இவர்போல ஒருத்தருக்காகவே காத்திருந்ததைப் போல மனநிறைவோடு நேசிக்கத் தொடங்குவீர்கள்.



எந்தச் சூழலிலும் உங்களைச் சுற்றி காற்றில் அமைதியை தூவி இருப்பார். அவர் உங்களை-உங்களாக நேசிப்பதால், நீங்கள்- நீங்களாகவே இருக்கலாம்; எதைப் பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. ஒரு வார்த்தை, ஒரு பாடல், ஒரு விருந்து,  கை கோர்த்து நடந்த நொடிகள் என மிகவும் முக்கியமானவை உங்கள் இதயத்தில் வாழும். உங்கள் சிறு வயது ஞாபகங்கள் தெளிவாக மனத்தில் அலையடிக்கும். நீங்கள் குழந்தையாக மாறுவீர்கள். வண்ணங்கள் அழகாகவும் பிரகாசமாகவும் தெரியும். நிலத்திலிருந்தே நீங்கள் சிறகடிப்பதை வானம் கண்டு வாழ்த்துவதாக உணர்வீர்கள். அதுவரை எப்போதாவது இருந்த சிரிப்பு, உங்கள் வாழ்வில் தினசரி வாழ்வில் மறுக்க முடியாத- மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாறிவிடும். கண்ணாடி முன் நின்று உங்களை ரசிப்பீர்கள்.



ஒரு நீண்ட நாளில், களைத்துப் போகும் நேரத்தில், அவரது ஒரு குறுஞ்செய்தி, ஓர் அழைப்பு உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும். அவருடைய இருப்பு அழகான திருப்தியைத் தரும். அவரோடு பேச வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிவதைப் போல, அவர் மனதில் இருப்பதை நீங்களும் உணர்வீர்கள். உங்களுக்கு ஆர்வமில்லாத விசயங்கள் கூட அவர்களுக்குப் பிடிக்கும் என்ற ஒரு காரணத்தால் உங்களைப் பரவசமாக்கும். உங்கள் நாளின் ஒவ்வொரு நொடியிலும், உங்களின் ஒவ்வொரு செயலிலும் அவரின் நினைவு இருக்கும். விரிந்து கிடக்கும் நீல வானம், கால் நனைக்கும் நதி, கவிதை சுமந்து வரும் தென்றல், புயல் போன்றவற்றில் அவரைக் காண்பீர்கள்.



உங்கள் இதயம் என்றேனும் ஒரு நாள் உடைக்கப்படலாம் எனத் தெரிந்தும் அதை அவருக்குக் கொடுப்பீர்கள். அப்படி கொடுப்பதில் எல்லையற்ற ஆனந்தத்தைக் கண்டடைவீர்கள். உடைந்து போகலாம் எனத் தெரிந்த பின்புதான் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும். உண்மையான மகிழ்ச்சி உங்களைப் பயம் கொள்ளச் செய்யும். ஆனால் ஒரு உண்மையான நட்பு, உங்களின் ஒரு பாதியாக அவர் இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்குத் துணையாக இருக்கும். ஏமாற்றங்களால் - தயக்கங்களால்- புறக்கணிப்பால் உருக்குலைந்து போன  வாழ்க்கை இனி வித்தியாசமானதாக மாறி

விடுகிறது. நம்பிக்கையை உங்கள் பேரன்பின் வேர்தேடி பற்றிக்கொள்பவரை நீங்கள் இறுகத்தழுவிக்கொள்வீர்கள்.



பரவசமாக- மகிழ்வாக- மதிப்புள்ளதாக- உங்களின் ஒரே நம்பிக்கை அவர் உங்கள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதுதான். அதுவே உங்கள் வாழ்வின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் அழகாக்கி வைத்துக்கொண்டே இருக்கும்...


❤️❤️❤️

Comments